உரிமைகள்

நாம் வயதாகும்போது, ​​சில தனிப்பட்ட மற்றும் சட்ட கேள்விகளை முன்கூட்டியே தெளிவுபடுத்துவது முக்கியம். முன்கூட்டியே திட்டமிடுவது நம் எதிர்காலத்தைப் பற்றிய முடிவுகளில் நமது கருத்துக்களை அனுமதிக்கிறது. உதாரணமாக நோய்வாய்ப்படும் நேரத்தில், கவனிப்பு தேவைப்படும் நேரத்தில் அல்லது மரணம் ஏற்பட்டால் என்ன நடக்க வேண்டும் போன்றவற்றில்.

மருத்துவ அதிகார பத்திரம்

மருத்துவ அதிகார பத்திரம் (Vorsorgeauftrag) என்பது ஒரு எழுதப்பட்ட ஒப்பந்தமாகும். ஒரு தனிநபர் தனது சொந்த முடிவுகளை எடுக்க முடியாத போது (இயலாமை) இது உதவுகிறது, எடுத்துக்காட்டாக ஒரு விபத்து, நோய் அல்லது முதுமைக்கு பிறகு. மருத்துவ அதிகார பத்திரம் தனிப்பட்ட விவகாரங்களை நிர்வகிக்க நம்பகமான நபர் அல்லது நிறுவனத்தை அங்கீகரிக்கிறது. இது கையால் எழுதப்பட்ட அறிவிப்பு மூலமாகவோ அல்லது ஒரு நோட்டரி பப்ளிக் மூலமாகவோ செய்யப்படலாம். இந்த பத்திரத்தில் ஒப்படைக்கப்படும் பொறுப்புகளை தெளிவாக விவரிக்க வேண்டும். இதை எந்த நேரத்திலும் மாற்றலாம் அல்லது திரும்பப் பெறலாம். குழந்தைகள் மற்றும் வயது வந்தோர் பாதுகாப்பு ஆணையம் (Kindes- und Erwachsenenschutzbehörde KESB) பத்திரம் செல்லுபடியாகும் தன்மையை சரிபார்க்கிறது. பத்திரம் உருவாக்கும் நபரின் நலன்களைப் பாதுகாக்க KESB நடவடிக்கை எடுக்கலாம்.

அட்டர்னி அதிகார பத்திரம்

அட்டர்னி அதிகார பத்திரத்தின் (Vollmacht) மூலம் ஒருவர், தங்களுக்கான விஷயங்களை செய்ய மற்றொரு நபர் அல்லது நிறுவனத்தை அங்கீகரிக்கலாம். அட்டர்னி அதிகாரத்தைப் பெறுபவர், அதிகாரத்தை அளிப்பவரின் (அங்கீகரிக்கும் நபர், bevollmächtigende Person) சார்பாக செயல்பட முடியும்.

மருத்துவ அதிகார பத்திரத்தை போலன்றி அட்டர்னி அதிகார பத்திரம், அது வழங்கப்பட்டவுடன் உடனடியாகவே நடைமுறைக்கு வருகிறது.

அட்டர்னி அதிகாரம் எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட வேண்டும். அதை வழங்கும் நபர் எந்த நேரத்திலும் வழக்கறிஞரின் அதிகாரத்தை மாற்றவோ அல்லது ரத்து செய்யவோ முடியும். அதிகாரத்தைப் பெறுபவர் அல்லது பெறும் நிறுவனம் என்ன செய்ய அங்கீகரிக்கப்படுகிறார் என்பதை ஒருவர் இங்கு சரியாகக் குறிப்பிடலாம். ஒரு சில குறிப்பிட்ட பணிகளுக்கு மட்டுமான தனி அதிகார பத்திரம் (spezifische Vollmacht) மற்றும் அதிகாரம் பெறுபவர் அல்லது அதிகாரம் பெறும் நிறுவனம் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட எதையும் செய்யவதற்கான அங்கீகாரத்தைத் தரக்கூடிய பொது அதிகார பத்திரம் (Generalvollmacht) இரண்டும் உள்ளன.

பொதுவாக, அட்டர்னி அதிகாரம் அந்த நபரின் மரணத்துடன் அல்லது அந்த நபர் இனி முடிவுகளை தன் விருப்பப்படி எடுக்க முடியாதபோது (nicht mehr urteilsfähig) முடிவடைகிறது.

நோயாளிகளின் வாழும் விருப்ப உயில்

நோயாளிகளின் வாழும் விருப்ப உயில் (Patientenverfügung) மூலம் ஒருவர் பிற்காலத்தில், தனது சொந்த முடிவுகளை எடுக்க முடியாத காலகட்டத்தில், தான் எப்படி வாழ வேண்டும் என்ற விருப்பங்களை முன்கூட்டியே வெளிப்படுத்தலாம். உதாரணமாக எந்த மருத்துவ சிகிச்சைகள் அனுமதிக்கப்படுகின்றன அல்லது மறுக்கப்படுகின்றன, எந்த உறுப்புகளை தானம் செய்ய விரும்புகிறார், இறுதிச் சடங்கு விருப்பங்கள் என்ன என்பதை பற்றிய விவரங்கள் இதில் அடங்கும். நோயாளிகளின் வாழும் விருப்ப உயிலின் தொடர்புத் தகவலில் குறைந்தது ஒரு நம்பகமான நபரையாவது சேர்ப்பது முக்கியம்.

உயில்

இறந்த நபரின் பணத்தையும் சொத்துக்களையும் யார் பெறுகிறார்கள் என்பதை வாரிசுரிமை சட்டப்பூர்வ ஒழுங்கு தீர்மானிக்கிறது. ஒருவரின் விருப்பம் வேறானதாக இருந்தால் அவர் ஒரு உயில் (Testament) எழுதலாம். அங்கு, வாரிசுரிமைக்கான சட்டப்பூர்வ வரிசையை மாற்றலாம். யார் எதைப் பெற வேண்டும் என்பது உயிலில் துல்லியமாகக் குறிப்பிடப்பட வேண்டும். இருப்பினும், வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் குழந்தைகள் எப்போதும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு உரிமையுடையவர்கள். இந்தப் பகுதி சட்டப்பூர்வ பங்கு (Pflichtteil) என்று அழைக்கப்படுகிறது. சட்டம் எல்லாவற்றையும் தீர்மானிப்பதை ஒருவர் விரும்பவில்லை என்றால் உயில் அவசியம். பரம்பரை உரிமையை நிர்வகிக்கும் விதிகள் சுவிஸ் சிவில் சட்ட புத்தகத்தில் (Schweizerisches Zivilgesetzbuch ZGB) அமைக்கப்பட்டுள்ளன. உயில் இல்லாமல், ZGB இல் உள்ள விதிகளின்படி பரம்பரை சொத்து விநியோகிக்கப்படுகிறது.

ஒரு உயிலை கையால் எழுதலாம். அது செல்லுபடியாகும் வகையில் இருக்க, சில விதிகள் பின்பற்றப்பட வேண்டும். ஒரு நோட்டரி பப்ளிக், உயிலை சரியாக எழுதி சான்றளிக்க (சான்றளிப்பு, beglaubigen) உதவலாம்.

இறப்பு மற்றும் அடக்கம்

வீட்டில் யாராவது இறந்தால், அவர்கள் தங்கள் குடும்ப மருத்துவரை அழைக்க வேண்டும். அவர்கள் கிடைக்கவில்லை என்றால், அவசர மருத்துவ சேவையை (அவசர மருத்துவர்) 0800 401 501 என்ற எண்ணில் (இலவசமாக) அழைக்க வேண்டும். ஒருவர் விபத்தில் இறந்தாலோ அல்லது இறந்த நபர் கண்டுபிடிக்கப்பட்டாலோ, அவர்கள் காவல்துறைக்கு (தொலைபேசி எண் 117) தெரிவிக்க வேண்டும்.

இறப்பு குறித்து இரண்டு நாட்களுக்குள் வசிக்கும் நகராட்சியில் உள்ள இறுதிச் சடங்கு அலுவலகத்திற்குத் (Bestattungsamt) தெரிவிக்க வேண்டும். பின்னர் இறுதிச் சடங்கு அலுவலகம் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்களை வழங்கும்.

கூடுதலாக, உறவினர்கள் மரணம் குறித்து பல்வேறு தரப்பினருக்குத் தெரிவிக்க வேண்டும். இதில் வீட்டு உரிமையாளர்கள், ஓய்வூதிய நிதி (Pensionskasse), சுகாதார காப்பீட்டு வழங்குநர்கள் (Krankenkasse), வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் அல்லது அதிகாரிகள் அடங்குவர்.

ஆர்காவ் முஸ்லிம்கள் சங்கம் (VAM), ஆர்காவ் மாகாணத்தில் உள்ள முஸ்லிம்களுக்கான குறிப்பிட்ட தகவல்களை வழங்குகிறது. உதாரணமாக, முஸ்லிம் அடக்கம் செய்யப்பட்ட இடங்கள் பற்றி.