பெற்றோரின் உரிமைகளும் பொறுப்புகளும்

குழந்தை பிறந்தவுடன் உடனே பதிவாளர் அலுவலகத்தில் பதியவேண்டும். மணம் முடிக்கும் போதே உறவுகளுக்கான உரிமை ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதால், மணம் முடிக்காத பெற்றோர், தாமாக இதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

பிறப்பைப் பதிதல்

ஒவ்வொரு குழந்தையும் பிறந்தவுடன் அதன் பிறப்பைப் பிரதேச பதிவாளர் அலுவலகத்தில் (Regionales Zivilstandsamt) பதியவேண்டும் கவனம்: பதிவாளர் அலுவலகம் குழந்தை பிறந்த இடத்தைப் பொறுத்து இருக்குமே தவிர பெற்றோர் வாழும் கிராமத்தைப் பொறுத்து இருக்காது. குழந்தை ஒரு வைத்தியசாலையில் பிறந்திருந்தால் அவ் வைத்தியசாலையே தமக்குரிய பதிவாளர் அலுவலகத்தில் பிறப்பைப் பதியும். குழந்தைப் பிறப்பு வைத்தியசாலையில் நடக்காமல் (உதாரணத்திற்கு வீட்டில் ) இருந்தால் பிள்ளை பிறந்து 3 நாட்களுக்குள் பிறப்பை தாமாகப்பதிய வேண்டும். பதிவாளர் அலுவலகம் தேவையான பத்திரங்களை அறியத்தரும். சுவிஸில் பிறக்கும் பிள்ளைகளுக்கு சுவிஸ் குடியுரிமை தானாகவே கிடைக்காது.

தந்தைக்கான அங்கீகாரம்

மணம் முடித்தவர்கள் குழந்தை பெற்றால் கணவனின் பெயரே தந்தை எனப் பதியப்படும். கணவன். குழந்தை தனக்குரியதில்லை எனச் சந்தேகித்தால் சட்டப்படி மேன்முறையிடலாம். பெற்றோர் மணம் முடிக்காவிட்டால் பிள்ளையின் தந்தை பெயர் தானாகவே பதியப்படாது. தந்தை குழந்தை பிறக்க முன்போ அல்லது பிறந்த பின்போ தான் வதியும் கிராமசபைப் பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று தானே தந்தை எனப் பதியவேண்டும். குழந்தையின் தந்தை தன் குழந்தை தான் என அங்கீகரிக்கத் தவறினால் தாய் நீதிமன்றத்திற்குச் சென்று அங்கீகாரம் தேடலாம்.

பெற்றோரின் அக்கறை

தமது பிள்ளைகளின் நலம் பற்றிய கடமையும் பொறுப்பும் பெற்றோருக்கு உண்டு (elterliche Sorge). உதாரணத்திற்கு இதனுள் அடங்குவது வளர்ப்பு அல்லது நிதி ஆதரவு. பிள்ளைகள் 18 வயது வரும் வரை சட்டப்படி பெற்றோரே பொறுப்பாகும். பெற்றோர் மணம் முடித்திருந்தால் சட்டப்படி இந்தக் கடமையும் பொறுப்பும் இருவருக்கும் தானாகவே வரும். பெற்றோர் மணம் முடிக்காவிடின் முதலில் தகப்பன் தன் பிள்ளையென ஏற்றுக் கொண்ட பின்பு தான் தாய் தந்தை தாமிருவரும் சேர்ந்து பெற்றோரின் பொறுப்பை (gemeinsame elterliche Sorge) ஏற்றுக்கொள்வதாக எழுத்து மூலம் கொடுக்கவேண்டும். இதைப் பிள்ளையை ஏற்றுக் கொள்ளும் போது பிரதேசப் பதிவாளர் காரியாலயத்திலோ அல்லது பின்பு பிள்ளைகள் பாதுகாப்பு நிர்வாகம் (Kindesschutzbehörde, KESB) பிரதேச குடும்ப நீதிமன்றிலோ செய்யலாம். மணம் முடிக்காத பெற்றோராயின் அவர்களுக்கிடையில் பிள்ளையின் பொறுப்பு விடயத்தில் ஒத்துவராவிடின் பிள்ளைகள் பாதுகாப்பு நிர்வாகம் தான் அதை முடிவு செய்யும். ஏதாவது கேள்விகள் இருப்பின் அல்லது உதவிகள் தேவைப்படின் அதற்கென உள்ள ஆலோசனை நிலையங்களை நாடலாம்.

பராமரிப்பு

பெற்றோர் பிரிந்திருந்தாலும் பிள்ளையைப் பராமரிக்கும் (பராமரிப்பு, Unterhalt) கடமைப்பாடு இருவருக்குமே உண்டு. அதற்காக அவர்கள் பிள்ளையைப் பராமரிக்கும் செலவுகள் பற்றி கலந்து பேசி ஒழுங்குக்கு வர வேண்டும். பராமரிப்புச் செலவுகளை தாய் தந்தை இருவருமே பங்கிடவேண்டும். ஓவ்வொருவரும் எவ்வளவு காசு கட்ட வேண்டும் என்பது அவரவர் பொருளாதார நிலையிலும் பிள்ளையின் பராமரிப்பில் எவ்வளவு பங்கெடுக்கிறார்கள் என்பதிலும் தங்கியுள்ளது. எதற்கும் ஒரு சரியான முடிவுக்கு ஒத்துவராவிடின் நீதிமன்றத்திற்குப் போகலாம். பணம் செலுத்தவேண்டிய பெற்றோரில் ஒருவர் பணம் செலுத்தாவிடின் வதியும் கிராமசபையில் உதவி கேட்டு விண்ணப்பிக்கலாம் (Alimentenbevorschussung).